IMG 20240409 WA0017

தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வீதி, பட்டாசு விபத்துகள் குறித்து கவனம்!

- அரசாங்கம் அறிவுறுத்தல்

- 2024 ஆம் ஆண்டில் அதிவேக வீதியில் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு.
- வீதி விதிமுறைகளை மீறுவோர் தொடர்பில் 24 மணித்தியாலமும் 1955 அவசர இலக்கதிற்கு அறிவிக்கலாம்.
- அதிவேக வீதி விபத்துக்களை மட்டுப்படுத்த சாரதிகள் ஓய்வுக்கான இடமொன்று அறிவிக்கப்படும்.

எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை குறைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கிறது.
பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதாலேயே 36% விபத்துகள் ஏற்படுவதாகவும், அதனால் 17% ஆனோர் கண் பாதிப்புகளுக்கு ஆளாவதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை போக்குவரத்து அமைச்சு, சுகாதார அமைச்சு என்பன இணைந்து முன்னெடுக்கவுள்ளன.

அதன்படி, பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக போக்குவரத்து அமைச்சு மற்றும் வீதி பாதுகாப்பு தேசிய சபை ஆகியன நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு 09.04.2024 ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.

இதன்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் சஜித் ரணதுங்க, நேருக்கு நேராக முச்சக்கர வண்டிகள் மோதிக்கொள்வதால் இடம்பெறும் விபத்துக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் மக்கள் கடுமையான விபத்துக்களில் சிக்கியவர்கள் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் அதிகளவு அதிவேக வீதிகளுக்கு வெளியில் இடம்பெறும் விபத்துக்களிலேயே அதிகளவானோர் மரணிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அதனால் நாளாந்தம் 10 பேர் வரையில் உயிரிழப்பதாகவும், விபத்துக்களை மட்டுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதனையடுத்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜயவர்தன, பண்டிகைக் காலத்தில் பேருந்துகளினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் தொடர்பில் 1955 என்ற அவசர இலக்கத்திற்கு 24 மணித்தியாலங்களும் அறிவிக்க முடியும் என்பதோடு, கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக பதிலளிக்க அதிகாரிகள் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு உரையாற்றிய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் பிரியந்த சூரிய பண்டார,

பண்டிகைக் காலத்தில் இரண்டு 2 இலட்சம் பேர் அதிவேக வீதிகளை பயன்படுத்தக்கூடும் என மதிப்பிடப்பட்டிருப்பதாகவும். அதனால் அதிவேக வீதிகளின் சகல காசாளர் நிலைய கதவுகளையும் திறந்து வைத்திருக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதிவேக வீதிகளில் ஏற்படும் விபத்துக்களை மட்டுப்படுத்தும் வகையில் சோர்வடைந்த சாரதிகள் ஓய்வெடுப்பதற்கான இடம் புத்தாண்டுக்கு முன்னதாக திறக்கப்படும் என்பதோடு, பண்டிகைக் காலங்களில் ஏற்படக்கூடிய விபத்துகளை மட்டுப்படுத்த அனைத்து சாரதிகளும் வீதி விதிமுறைகளை பேண வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.

அதிவேக வீதிப் பாதுகாப்பு நடவடிக்கை ஆலோசனைக் குழு உறுப்பினர் கலாநிதி சாமோத் ஹெட்டியாராச்சி,
அதிவேக வீதிகளில் 56% விபத்துகள் சாரதிகளின் கவனக்குறைவால் ஏற்படுகிறது.

அவற்றில் 35% விபத்துக்களில் மரணம் அல்லது முழுநேர முழுமையான முடக்கத்தை ஏற்படுத்துகிறது. தெற்கு அதிவேக வீதி நிர்மாணிக்கப்பட்டு, பதின்மூன்று வருடங்களில் 9,375 விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 5292 விபத்துகள் சாரதிகளின் கவனக்குறைவால் ஏற்பட்டவையாகும். இந்த விபத்துக்களில் 66 பேர் உயிரிழந்துள்ளதோடு, 637 பேர் முழுமையாக ஊனமுற்றுள்ளனர்.

மேலும், கணக்கெடுப்பு மற்றும் மேற்பார்வை அறிக்கைகளில், அதிவேக வீதி விபத்துகளுக்கு சாரதிகளின் அலட்சியம், வாகனங்களை பராமரிக்காமை மற்றும் மூன்றாம் தரப்பினரால் விபத்துக்கள் ஏற்படுத்தப்படுதல் உள்ளிட்ட மூன்று முக்கிய விடயங்களே விபத்துக்களுக்கு காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதி பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மயூர பெரேரா
2024 ஆம் ஆண்டில் இதுவரை நெடுஞ்சாலைகளில் 07 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில் இது அதிகரிப்பை காட்டுகிறது. 2022 ஆம் ஆண்டில், அதிவேக வீதிகளில் 17 பயங்கரகமான விபத்துகளும், 2023 ஆம் ஆண்டில் 04 மரணம் ஏற்படுத்தும் விபத்துகளும் நடந்துள்ளன. எனவே இம்முறை பண்டிகை காலத்தில் விபத்துக்களை மட்டுப்படுத்தும் வகையில் சாரதிகள் ஒழுங்கு விதிகளை பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் துஷார சுரவீர,
புதிய தொழில்நுட்பத் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்துவதும் போது சாரதிகளின் கவனச்சிதறலால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்குத் தேவையான ஒழுங்கு விதிகள் மற்றும் விதிமுறைகள், நடைமுறையிலிருக்கும் மோட்டார் வாகனக் கட்டளைச் சட்டத்தில் இல்லை. எனவே, விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதற்காக சாரதி அனுமதி பத்திரம் வழங்குவதற்கான பயிற்சிகளிலிருந்து முறையான நெறிப்படுத்தல்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தொழில்நுட்பம்) ஜே.ஐ.டீ.ஜயசுந்தர, தேசிய வீதி போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் எம்.கே.ஆர்.குணரத்ன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

சாறு- ஜனாதிபதி ஊடகப் பிரிவு